இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2020 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணி இயக்குனர் அனில் கும்ப்ளே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தவிர, அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, இதுதொடர்பான வீடியோவை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ராகுல் பஞ்சாபின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ப்ளே இதுகுறித்து தெரிவிக்கையில்., ராகுலின் வாழ்க்கைக்கு இது சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அணியில் கேப்டனாக அவரது பங்கு அவரது செயல்திறனை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா தான் வெளியிட்டுள்ள வீடியோவில் மேலும் குறிப்பிடுகையில்., "இப்போது பஞ்சாப் அணிக்கு ராகுல் வடிவத்தில் புதிய கேப்டன் கிடைத்துள்ளார். ராகுல் ஒரு பேட்டிங் பேட்ஸ்மேன் மட்டுமல்ல, அவர் அழுத்தத்தின் கீழ் நன்றாக விளையாடும் வீரரும் கூட. அவர் இளம் வீரர் மட்டுமல்லாது நல்ல ஆட்டக்காரரும் கூட. அவர் எங்கள் அணிக்கு கேப்டனாக இருப்பார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
So @klrahul11 will be our new skipper super excited, hope you guys are too ! #Saddasquad #SaddaPunjab #Saddacaptain #ting @lionsdenkxip pic.twitter.com/fswxGv1qhh
— Preity G Zinta (@realpreityzinta) December 19, 2019
அதே நேரத்தில், ராகுலும் ஒரு வீடியோவை பகிர்ந்து தனது மகிழ்வினை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் தெரிவிக்கையில்., இந்த பொறுப்பை எனக்கு வழங்க ரசிகர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்களால் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஏலத்தில் எங்களுக்கு, நாங்கள் விரும்பிய வீரர்கள் கிடைத்தனர். அணியின் வெற்றிக்கு போதுமான பலம் இருப்பதை உணர்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாபின் கேப்டனாக இருந்தார். அஸ்வின் இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பொறுப்பு ராகுல் வசம் சென்றுள்ளது.