ரோகித் ஏமாற்றம்
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது. கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 71 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் குவித்தது. ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா ஏமாற்றினாலும், மறுமுனையில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து கே.எல்.ராகுல் அதிரடி காட்டினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 2வது அரைசதத்தை நிறைவு செய்து 51 ரன்களில் அவுட்டானார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடி
விராட் கோலி 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க சூர்யா குமார் யாதவ் 360 டிகிரியில் சுழன்று அடித்து ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 25 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
ஜிம்பாப்வே தோல்வி
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு சென்றனர். ஒருகட்டத்தில் அந்த அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. பின்வரிசையில் இறங்கிய சிக்கந்தர் ராஸா ஓரளவுக்கு அதிரடியாக விளையாட, அணி கவுரமான ஸ்கோரை எட்டியது. முடிவில் அந்த அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றி மூலம் குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த இந்திய அணி, கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்துடன் மோதல்
குரூப் 1-ல் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளும் வரும் வியாழக்கிழமை அடியெல்டு மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் 20 ஓவர் உலக கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தும்
ஃபார்முக்கு வருவாரா கேப்டன்?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அவர், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக எதிர்பார்த்தளவுக்கு ஆடவில்லை. இதனால், அரையிறுதிப் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை விளையாடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ