Actor Vijay News: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், தமிழக வெற்றிக் கழக்கத்தின் (Tamilaga Vetri Kazhagam) தலைவரும், நடிகருமான விஜய் (Vijay) மீது புகார் அளித்தார். அதில், நடிகர் விஜய் தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு வந்ததாக சமூக ஆர்வலர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தேர்தலில் ஓட்டளிக்க நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்ததால், அவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் அளித்த அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் விவரம்
அந்த புகாரில், "நான் மேற்கண்ட முகவரியில் சமூக ஆர்வலராக சமூக பணி செய்து வருகிறேன். தமிழக காவல் துறை மூலமாக எந்த ஒரு கட்சிக்கும், இயக்கத்திற்கும்,அமைப்புக்கும், இருசக்கர பேரணி, சாலை பேரணி செய்ய அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் தேர்தல் விதிமுறைகளை மீறி நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களிக்கும் அவரின் வாக்குச்சாவடியில் 200க்கும் மேற்பட்ட நபர்களை அத்துமீறி கூடினர். இது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை 10க்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி வரக்கூடாது என்ற விதியை மீறுவதாக உள்ளது.
நடிகர் விஜய் தனது சுயநல விளம்பரத்திற்காக நீலாங்கரை மக்களுக்கு பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும், மற்றும் போக்குவரத்து விதிமீறலில் சாலையில் செல்லும் பொது இடையூறு செய்யும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான உள்நோக்கத்தை கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் வாக்கு சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து வரிசையில் நின்று வாக்களிக்காமல் காவல்துறையினரின் உதவியோடு தனது வாக்கை செலுத்தியுள்ளார். கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர் இவ்வாறு செய்வது சரியானது கிடையாது, அவமானம்.
இப்படி செயல்படுவதுதான் மாற்று அரசியலா? அரசியல் பழகும் இளைய தலைமுறைக்கு இவர் தரும் அரசியல் பாடம் இதுதானா ? தனது படம் வெளியீட்டில் பால் பாக்கெட்டை திருடி கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்யும் இளைஞர்களை இவரா நல்வழிப்படுத்துவார். எனவே, தேர்தல் வீதிகளை மீறிய தவெக தலைவரும், நடிகருமான விஜய் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 143, 290, 357, 171(F) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க கோரி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
குவிந்த ரசிகர்கள்
மக்களவை தேர்தலுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரை வாக்குச்சாவடியில் விஜய் நேற்று வாக்குச் செலுத்தினார். ரஷ்யாவில் The Greatest Of All Time திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த அவர், வாக்களிப்பதற்காக நேற்று காலை சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அவர் நேற்று மதியம் 12.15 மணியளவில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். பனையூர் அருகே உள்ள அவரின் வீட்டில் இருந்து காரில் வந்த அவரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து அவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு நுழைந்து, வாக்குச் செலுத்திவிட்டு மீண்டும் காரில் ஏறிச்செல்வதற்கு படாதபாடுப்பட்டார். அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டாலும், திடீரென கூட்டம் வந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்பட்டது. அதனாலேயே விரைவாக விஜயை வாக்களிக்கச் செய்து திருப்பி அனுப்பியதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க | நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ