போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

புதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2021, 10:47 AM IST
  • தமிழகத்தில் கடந்த செவ்வாயன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • மக்களுக்கு பணத்துக்கு பதில் போலி டோக்கன் அளித்து ஏமாற்றிய சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.
  • இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் இந்த டோக்கனை வழங்கியது அமமுக நிர்வாகி கனகராஜ் என்பதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு  title=

கும்ககோணம்: தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளும் பணப் பரிமாற்றங்களும், பட்டுவாடாக்களும் நம்மை பல சமயங்களில் வியக்க வைக்கின்றன. சட்டவிரோத முறையில் பணம் அளிக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல பறக்கும் படைகள் மூலம் மாநிலம் முழுவதும் கண்காணித்து வந்தது. பணம் கொடுத்தால் மாட்டிக்கொள்ளும் அச்சத்தில் பொருளாகக் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்கும் உத்தியும் பல காலமாக உள்ளதே. இந்த தேர்தலிலும் அப்படி பல காட்சிகள் காணக் கிடைத்தாலும், கும்பகோணத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த செவ்வாயன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், புதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.

அதிர்ச்சியின் காரணம், வந்தவர்கள் அனைவரும் டோக்கனுடன் வந்ததே ஆகும். டோக்கனுடன் வந்த அனைவரும் டோக்கனை கொடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை இலவசமாக தருமாறு கூறியதால் மளிகை கடைக்கடைக்காரர் ஷேக் அகமது பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். 

ALSO READ: விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை, தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்!

கூட்டம் கூட்டமாக தன் கடைக்கும் வந்த அனைவரும் இவ்வாறு டோக்கனுடன் வந்து பொருள் கேட்கவே மளிகைக்கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. டோக்கனுக்கு பொருட்களைத் தருவதாக தான் யாரிடமும் கூறவில்லை, யாருக்கும் அப்படி ஒரு வாக்கை அளிக்கவில்லை, தன் சார்பில் இப்படி கூற யாருக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று அவர் தன் கடைக்கு டோக்கனுடன் வந்த மக்களுக்கு விளக்கினார். 

இதை பொது மக்கள் ஒப்புக்கொள்ளாமல், கடைகாரர் தான் தங்களை ஏமாற்றுவதாக எண்ணத் தொடங்கினர். இதனால் மனம் நொந்த மளிகைக்கடைக்காரர், தேர்தல் (Assembly Election) ஆதாயத்துக்காக வேட்பாளர்கள் தந்த டோக்கனுக்கும், தங்கள் மளிகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கடையின் கதவில் நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். 

பதவிக்கு வந்தவுடன் ஏமாற்றுவதுதான் பொதுவாக அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால், இப்போது அதையும் மீறி வாக்குப்பதிவுக்கு முன்னரே போலி டோக்கன் அளித்து ஏமாற்றியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாத ஒரு மளிகைக்கடைக்காரரையும் இதில் சிக்க வைத்துள்ளார்கள். 

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் இந்த டோக்கனை வழங்கியது அமமுக (AMMK) நிர்வாகி கனகராஜ் என்பதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், பணத்துக்கு பதில் டோக்கன்களை, அதுவும் போலி டோக்கன்களை வழங்கி மக்களை ஏமாற்றிய இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெவ்வேறு விதங்களில் தங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை எண்ணி மக்கள் மனதில் வருத்தமே மேலோங்குகிறது. 

ALSO READ: விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்தது ஏன்? குஷ்பு புதிய விளக்கம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News