நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் தி.மு.க. செயல் தலைவ மு.க ஸ்டாலின் பேசினார்.
அப்பொழுது அவர் கூரியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இதன்மூலம், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
திமுகவை பொறுத்தவரையில் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்களின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வோம்.
தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, சீக்கிரம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என அவர் கூறினார்.