பிரௌனி நாயை காணவில்லை... மனதை உருக்கும் மதுரை போஸ்டர்...

Madurai Dog Missing Poster: மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் பிரௌனி (பெண் நாய்) காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து இங்கு காணலாம். 

Written by - முனைவர் பலராமன் சுப்புராஜ் | Last Updated : Feb 8, 2023, 05:47 PM IST
  • செல்லப்பிராணிகள் வளர்ப்பில் உளவியல் சார்ந்த காரணம் உள்ளது.
  • நாய் வளர்ப்பில் பல வித கட்டுப்பாடுகளும் உள்ளன.
பிரௌனி நாயை காணவில்லை... மனதை உருக்கும் மதுரை போஸ்டர்... title=

விலங்குகளை வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் என இரு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர். அந்த வகையில் இல்லத்தில் நாய், பூனை, முயல், ஆடு, மாடு, குதிரை, யானை போன்ற விலங்கினங்களையும் கிளி, புறா, கோழி, சேவல் போன்ற பறவையினங்களையும் வளர்த்து வருகின்றனர். இவற்றைச் செல்லப் பிராணிகள் என்னும் பொதுச்சொல்லால் குறிக்கின்றனர். 

எழுத்தாளர் கல்யாணராமன் ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த நேர்காணலில் உயிருள்ள மனிதர்களிடம் பேசுவதைவிட தி.ஜானகிராமன், ஆத்மநாம், பாரதியார் இவர்களோடு பேசப் பிடித்திருக்கிறது என்றார். இக்கூற்றை எளிமையாகக் கடந்து செல்ல முடியவில்லை. இதற்குப் பின்னணியில் ஆழமான உளவியல் காரணம் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. அதுபோல செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் உயிருள்ள மனிதர்களிடம் பேசுவதைவிடத் தன் செல்லப்பிராணிகளிடம் பேசுவதன் பின்னணியையும் எளிமையாகக் கடந்து செல்ல முடியாது. இதிலும் ஆழமான உளவியல் காரணம் பொதிந்துள்ளதை நம்மால் உணர முடிகிறது. செல்லப் பிராணிகளை வளர்த்தல் என்பதை வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமன்று. அது மன அழுத்தத்தைத் கடத்தவும் பலருக்குப் புதிய தன்னம்பிக்கையை அளிக்கவும் செய்கிறது. வீட்டில் தனிமை என்பதான உணரவே ஏற்படாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். மேலும் மனிதர்களின் மன வளமும் உடல் நலமும் ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நவீன காலத்தில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பில் நாய்க்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறலாம். நாய் நன்றி உள்ளது, வீட்டைப் பாதுகாக்கிறது என்பதைக் கடந்து நாய் பற்றிய பிம்பம் மாறியுள்ளது எனலாம். இந்நிலையில் நாயானது பல்வேறு இல்லங்களில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. வீட்டிற்கு வெளியே கட்டிப்போட்டு வளர்க்கப்பட்ட நிலையில் செல்லப் பிராணியான நாய்கள் தற்போது குளிரூட்டப்பட்ட அறையிலும், விலை உயர்ந்த சொகுசு மகிழுந்திலும் (Car) வளர்க்கப்பட்டு வருகின்றன. அயலகத்தில் செல்லப் பிராணியாக நாயை வளர்க்க வேண்டுமானால் உரிமம் பெற வேண்டும். மேலும் கடுமையான பல சட்ட திட்டங்களைப் பின்பற்றி அதனை வளர்க்க வேண்டியுள்ளது என்கின்றனர். 

மனித இனத்தோடு செல்லப் பிராணிகள் வாழ்வது என்பது மிகச் சவாலான ஒன்று. மேலும் விலங்கினத்தை அதன் இனத்திலிருந்து தனிமைப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது தனிமையை விரும்பாது. அதோடு இனமான மற்றொரு உயிரினத்தையும் சேர்த்து வளர்க்க வேண்டும். இதன் காரணமாகவே ஒவ்வொரு வீட்டியில் ஒற்றை நாய் வளர்க்கப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சினிமா பாணியில் வாடகை லாரி டெண்டர்: டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்

நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளன. தங்களுக்குப் பிடித்தமான நாய் வகைகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல், செல்லப் பிராணியான நாய்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை வைத்து அழைக்கின்றனர். பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகின்றனர். மேலும் ஒருபடி மேலே சென்று செல்லப் பிராணியான நாயைத் தங்களின் உற்ற தோழனாக, உற்ற தோழியாக, குழந்தையாக,  மகனாக, மகளாக, கடவுளாக (dog - god)பாவித்து வருகின்றனர். தங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக்கி உள்ளனர். தங்களின் செல்லப் பிராணியை நாய் என்று சொன்னால் வளர்ப்பவர்கள் மூர்க்கமான குணத்தைக் காட்டுவார்கள். பின்பு, இதன் பெயர் பிரௌனி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்வதுண்டு. புலனத்தில் (WhatsApp) டிபியாகவும் (DP), ஸ்டேட்டஸ் (Status) ஆகவும் வைக்கும் அளவிற்குச் செல்லப் பிராணியான நாய் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவற்றின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாகக் கூறுகின்றனர். பல்வேறு நாடுகளில் நாய்களின் கண்காட்சிகளும் அணி வகுப்புகளும் நடந்து வருகின்றன. நாய்களுக்கான தேவையான பொருட்களைப் பெற பெட் ஷாப்ஸ் (Pet shops) அதிகரித்து வருகின்றன. நாய்களின் உடல்நலத்தைப் பேணும் வகையில் பிரத்யேகமான மருத்துவர்களும் கணிசமாக அதிகரித்துள்ளனர். இதன் மூலம் செல்லப்பிராணி வளர்ப்பின் பின்னணியில் பொருளாதாரச் சந்தை வேகமாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தங்களுடைய வீட்டில் குடும்ப உறுப்பினர் ஒருவர் காணவில்லை என்றால் அவருடைய அங்க அடையாளங்களுடன் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி எடுப்பார்கள். மேலும் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு அல்லது தகவல் அளிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் அளிப்பதாக விளம்பரம் செய்வார்கள்.

அதேபோல மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் தன் வீட்டுச் செல்லப்பிராணி பிரௌனி (பெண் நாய்) காணவில்லை என்று அதன் அங்க அடையாளங்களுடன் நாயின் புகைப்படத்துடன் முழு விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. காணாமல் போன அன்று பிரௌன் கலர் பெல்ட் அணிந்திருந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்புக்கு இரண்டு அலைபேசி எண்களும் இருந்தன. இப்போஸ்டர் பலரையும் கவனிக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

Dog

பொதுவாக மனிதர்களை அல்லது குற்றவாளிகளைக் காணவில்லை என்றால் அதற்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்போஸ்டரிலும் தங்களின் செல்லப் பிராணியைக் கண்டுபிடித்துத் தருபவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரைப் படித்துப் பார்ப்பவர்கள் சிலர் அதனை எளிமையாகக் கடந்து சென்றிருக்கலாம். சிலர் அசட்டையாக எள்ளி நகையாடி இருக்கலாம். சிலர் பொறுப்புணர்வோடு பதிலளிக்க முயற்சி செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் அந்தச் செல்லப் பிராணியை வளர்த்த குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவத்தை பிரௌனி (பெண் நாய்) கொடுத்திருக்கும் என்பதைச் சிந்திக்க வைக்கிறது அந்த போஸ்டர். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் அந்தப் பிரௌனி (பெண் நாய்) எப்படி இருந்திருக்கும் என்றும் அவர்கள் அந்தப் பிரௌனியிடம் (பெண் நாய்) எப்படி இருந்திருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் போஸ்டராக அது தென்படுகிறது.

மேலும் படிக்க | விபூதியை உடலில் எங்கெல்லாம் பூசி கொள்ளலாம்? அதன் மகத்துவம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News