ஒடிசாவில் நடந்த மிகப்பெரிய கோர ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் கவனக்குறைவால் ஏற்பட்ட மிகப்பெரிய இந்த விபத்தால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. குடும்பங்கள் திசை தெரியாமல் சோகக்கடலில் மூழ்கியிருக்கின்றனர். மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்திருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
முகம் மற்றும் உடல்கள் முழுமையாக சிதைந்த நிலையில் இருப்பதால், யார் என்பதை கண்டுபிடிப்பதில் அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும் சவாலாக இருக்கிறது. விபத்து நடந்த 2 நாட்கள் ஆன பின்னரும் 88 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்பதிவு பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் எளிதாக தெரிந்தாலும், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணித்த பயணிகளின் அடையாளம் காண்பதில் தான் இப்போது பெரும் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் படிக்க | ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்
குடும்பத்துக்கு மற்றும் உறவினர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்கள் குறித்து தகவல் தெரியாதவர்கள் இப்போது ஒடிசாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்காக அந்தந்த மாநில அரசுகள் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுளது. தமிழக அரசு சார்பிலும் உதவி மையங்களும், உதவி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பலர் ஒடிசா நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். ரயில் பயணம் என்பது அதிக நேரம் என்பதால் விமான பயணத்தை, ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனை குறி வைத்து தனியார் விமான நிறுவனங்கள் ஒடிசாவுக்கு செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன. வழக்கமான நாட்களைக் காட்டிலும் 6 முதல் 20 மடங்கு வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனியார் விமான நிறுவனங்கள் இக்கட்டான இந்த சூழலை பயன்படுத்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதனை மத்திய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா சென்று திரும்புவதற்கான பயணக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
— (@SuVe4Madurai) June 4, 2023
அந்த பதிவில், " அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு?... அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்" என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா!... கருணை இல்லா அரசே... என்று சாடியும் உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ