உலகில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா? -வைகோ வேதனை!

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர், ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 1, 2019, 10:01 PM IST
உலகில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா? -வைகோ வேதனை! title=

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர், ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (30.11.2019) டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., 

இடிமேல் இடியாக தமிழினத்தின் தலையில் தாக்குதல்கள் நடக்கின்ற விதத்தில் காரியங்கள் நடக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி கோத்தபய ராஜபக்சே. அதற்கு சாட்சியங்கள் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்ட கொலைபாதகனின் பதவியேற்பு விழாவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சென்று இருந்தார்.

கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு நீங்கள்தான் அழைத்தீர்களா? என்று நாடாளுமன்றத்தில் நான் கேட்டேன். ஆமாம் நான் அழைப்பு விடுத்தேன் என்றார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். இந்தியாவுக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவுடன் நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பேசியதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது.

இலட்சக்கணக்கான பெண்களைக் கொன்று, பெண்களை பலாத்காரம் செய்து நாசப்படுத்தி, கற்பழித்துக்கொன்று, 90 ஆயிரம் விதவைகள் வேதனையில் தேம்பி அழ, காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், இன்னும் எண்ணற்றவர்கள் சிறையில் வாடி வதங்கும் வேளையில், நான்கு வீட்டுக்கு ஒரு இராணுவ வீரன் என்று ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தி வைத்து, யாழ்ப்பாணத்தையும், தமிழர் பகுதிகளையும் காவல் கூடங்கள் ஆக்கி வைத்திருக்கின்ற கொலைகாரன் கேட்டான் என்று இலங்கையில் அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு 350 கோடி ரூபாயும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு 2800 கோடி ரூபாயும் தரப்போகிறோம். அதுமட்டுமல்லல, வரலாறு, மொழி உறவால் நாம் ஒன்றுபட்டு இருக்கின்ற இலங்கைக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்போம் என்று நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கின்றார்.

சரித்திரம் அறியாதவர் என்று நான் வருத்தப்படுகிறேன். மொழி, இன இரத்த பந்தத்தால் பின்னப்பட்டு இருப்பவர்கள் இங்கே இருக்கும் எட்டரை கோடி தமிழர்கள். எங்கள் இரத்தம்; அது தமிழர்கள் சிந்திய இரத்தம். ஆக மொழியால், இனத்தால், இரத்த பந்தத்தால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவிக்கு நீங்கள் இவ்வளவும் அள்ளிக் கொடுத்திருக்கின்றபோது, வேறு நாடுகள் கண்டுகொள்ளாமல் போனால் உலகத்தில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா?

இலங்கையின் அதிபர் கொலைகாரன் கோத்தபய ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

சமீப காலத்தில் இவ்வளவு மன வேதனையை நான் அனுபவித்தது இல்லை. கொலைகாரப் பாவிக்கு நீங்கள் பட்டம் சூட்டி, பரிசுப் பொருளும் கொடுத்து, இன்னும் எது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறீர்கள்.

உலகத் தமிழ் இனத்துக்கு நாதி இல்லை. காரணம், எட்டரை கோடி தமிழர்கள் வாழுகிற இந்திய நாட்டின் அரசே அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது.

ஏமாற்று வேலைக்கு படகுகளை விடுவிக்கிறேன், பத்தாயிரம் வீடுகள் கட்டித் தருகிறேன் என்று சொல்கிறாரே தவிர, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே! அதற்கு என்ன நீதி? நீதி கிடையாதா? தமிழனுக்கு நாதி கிடையாதா? இரக்கமற்றவரே, இதயமற்றவரே இந்தியாவின் தலைமை அமைச்சரே காவு கொடுத்துவிட்டீரே!... மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News