அதிகாலையிலேயே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 4 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 5-வது கட்டமாக 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
ரம்ஜான் நோன்பு மற்றும் கடும் வெயில் காரணமாக எஞ்சிய வாக்குப் பதிவை முன்னதாக, தொடங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுதாக்கல் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய ஓட்டுப் பதிவு 5.30 மணிக்கே தொடங்க உத்தரவிட என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு எஞ்சிய 3 கட்ட ஓட்டுப் பதிவை காலை 5.30 மணிக்கே தொடங்குவது குறித்து தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்யலாம் என்று யோசனை தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தலை காலை 4 மணிக்கே தொடங்கினால், பூத் ஏஜெண்டுகளும் முன்கூட்டியே வர வேண்டியிருக்கும். ஆனால் தற்போது 6 மணிக்கு வர வேண்டிய பூத் ஏஜெண்டுகள் கூட சரியாக அந்த நேரத்திற்கு வருவதில்லை. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஆகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.