தமிழகத்துக்கு ஒரே ஓட்டுக்கு மூன்று முதல் அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி வந்துள்ளார்" என்று கிண்டல் கேலியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இடத்தைப் பார்வையிடுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அங்குவந்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில்தான் ஒரே ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள் கிடைத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். இந்தியாவில் வேறு எங்காவது இப்படி ஒரு நிலையை நீங்கள் பார்த்துள்ளீர்களா? தமிழகத்தில் மட்டும்தான் இப்படி.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் முழுவதும் சீர்கெட்டுக் கிடக்கிறது. தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அக்கறை செலுத்தவில்லை.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு யார் வந்தாலும் மக்கள் ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. பாஜக ஆவியாக இருக்கிறது. அப்படியிருக்க எப்படி காலூன்ற முடியும் என்று நாஞ்சில் சம்பத் பேசியிருந்தார். நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும்போது எனக்கு நாஞ்சில் சம்பத் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.