ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் விதித்தது. பின்னர் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது. மேலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 3 மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில்
ஒருவரான முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
எனவே இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.