சென்னை: சென்னையின் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி, இந்த திசையில் பல அவசர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தற்போது பள்ளிகளில் இது போன்ற பாலியல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு தனிக்குழு அமைக்கபடும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று, தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) கலந்தாலோசித்தார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், அவரிடம் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார். பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வெண்டும் என்பதற்கான கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு விரையில் வெளியிடும் என இன்று காலை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் விசாரணையில், இன்னும் சிலரும் அந்த பள்ளியில் இப்படிப்பட்ட நடவடிகைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலியல் புகார்களை (Sexual Harassment Cases) விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. எனினும், இவற்றைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு உள்ளதா, இந்த விசாகா கமிட்டி அனைத்து பள்ளிகளிலும் உள்ளதா, இருக்கும் கமிட்டிகள் ஒழுங்காக செயல்படுகின்றனவா ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட பத்மா சேஷாத்ரி கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 14 நாட்களுக்கான நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். மேலும் இவற்றைப் பற்றி வெளியே கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மாணவிகளை மிரட்டியும் உள்ளார்.
இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு முதலில் ஒத்துழைக்காத பள்ளி நிர்வாகம், பின்னர் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதாகத் தெரிவித்தது. இது குறித்த முழு விசாரணையை கோரி 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் பள்ளி மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து பள்ளி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ALSO READ: ஆன்லைன் வகுப்புகள்: ஆசிரியர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளது தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR