காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாசார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.
முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை தொடங்கப்பட்டதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல் துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசாரத் துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் - காசியில் இளையராஜா பேச்சு
நேற்று நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, “காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி திகழ்கிறது. காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காசி விஸ்வநாதரும், ராமேஸ்வரத்தின் ராமேஸ்வரரும் நமக்கு அருள்புரிந்து வருகின்றனர். காசி மற்றும் ராமேஸ்வரத்தில் சிவமும், சக்தியும் உள்ளது. ஒரே பாரதம் என்ற கனவை நினைவாக்கும் நிகழ்ச்சியாக காசி தமிழ்ச்சங்கமம் விளங்குகிறது. காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர்” என்று பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ