கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தார் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்!
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புயல் தாக்கிய பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையே அடிப்படை தேவையாக இருப்பதால் அரசின் உதவியை எதிர்நோக்கியே மக்கள் உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவச வசதிகள் கூட ஏதும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், புயலில் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் புயலால் பாதிக்க மக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தார் ரூ.50 லட்சம் ரூபாயினை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
On behalf of #ActorSivakumar family #SriSivakumar @Suriya_offl @Karthi_Offl #Jyotika & @2D_ENTPVTLTD donating a sum of Rs. 50 Lakhs through NGOs towards #GajaCycloneRelief #GajaCyclone #LetsAllJoinHands #prayfordelta
— rajsekarpandian (@rajsekarpandian) November 19, 2018
இந்த உதவியை தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்க இருப்பதாகவும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக சார்பில் 1 கோடி ரூபாயும், திமுக MLA மற்றும் MP-க்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.