புதுச்சேரியில் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு; பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 4 அதிகரிப்பு...!
புதுவை: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார். இதையடுத்து இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
2014 ஐ அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பால் விலை புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மாட்டு தீவனம், பசுந்தீவனம், புண்ணாக்கு, தவிடு, உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக உயர்ந்ததன் காரணமாக உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட பாலின் விலை ரூபாய் 36 லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றம் விற்பனை விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹28 இருந்து ₹32-ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது லிட்டருக்கு ₹4 உயர்த்தப்படது குறிப்பிடத்தக்கது.