சென்னை: மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன.
நீட் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. என்றாலும் மத்திய அரசு நீட் தேர்வில் உறுதியாக இருந்தது. நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ளனர். ஆனால், கிராமங்களில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இல்லை. இதற்கு செயல் வடிவம் கொடுக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மட்டு மல்லாது மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவையும் சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தாக்கல் செய்தார்.
தற்போது மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால் கிராம மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்கம் பாதிக்கப்படும். எனவே, மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தற்போதைய நடை முறையை தொடரும் வகையில் சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.