சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசடை நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
எண்ணெய் அகற்றும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இரண்டு கப்பல்கள் உராய்வு ஏற்பட்டதால், ஒரு கப்பலில் ஏற்பட்டு கசிவு ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. கடலில் கலந்த எண்ணெய் அகற்றும் பணியை தமிழக அரசும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் இந்த பணியை 5,700 பேர் ஈடுபட்டுள்ளனர். கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி ஒரிரு நாளில் முழுமையாக நிறைவு பெறும். மீனவர் வாழ்வாதாரம் எவ்வகையிலும் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனில் எந்த நச்சுப்பொருளும் இல்லை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.