தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் வீர விளையாட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டை பொழுதுபோக்காக நடத்த முடியாது. மதரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வீட்டு விலங்கான காளையை கொடுமைப்படுத்துவது கொடூரமானது என நீதிபதிகள் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவினால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.