சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவால் கட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் தினகரன். 2011-ம் ஆண்டு இறுதியில், சசிகலா, தினகரன் உட்பட அவர்களின் குடும்பத்தை சேர்ந்த, 14 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு பிறகு சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு கட்சிக்குள், போயஸ் தோட்ட வீட்டுக்குள்ளும் சேர்க்கப்பட்டார்.
அந்த கடிதத்தில், ‛ என் குடும்பத்தினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவே பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியை அவர் கைப்பற்ற முயற்சித்த போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், சிறைக்கு செல்லும் முன் தன் உறவினர்கள் தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசை கட்சியில் சேர்த்தார். அடுத்த நாளே, துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் தினகரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர், துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.