சிங்கபூரில் முதன்முறையாக முற்றிலும் இந்திய உணவை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!
பிரியாணி, பரோட்டா போன்ற சுவையான இந்திய உணவு பொருட்களை, தானியக்க இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க சிங்கப்பூர் சகுந்தலாஸ் உணவகம் முயற்சித்து வருகிறது.
இந்த வகையில் முற்றிலும் இந்திய உணவு பொருட்களை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரத்தினை, கடந்த ஒரு மாத காலமாக சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வர்த்தகப் பள்ளியில் சிங்கப்பூர் சகுந்தலாஸ் உணவகம் அமைந்துள்ளது.
சிங்கப்பூரில், இந்திய உணவுகளை மட்டும் விநியோகம் செய்யும் முதல் தானியக்க இயந்திரம் என்னும் பெருமையினை தற்போது இந்த தானியக்க உணவு விநியோக இயந்திரம் பெற்றுள்ளது.
வர்த்தகப் பள்ளி மாணவர்களிடையே இந்த தானியக்க உணவு முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சகுந்தலாஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் திரு மாதவன் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் "மாணவர்களுக்குச் சுவையான, ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பது பள்ளிகளின் வேண்டுகோள். அதற்கேற்ப நாங்கள் குறைந்த கலோரி, எண்ணெய், உப்பு, சர்க்கரையைக் கொண்டு உணவுகளைத் தயாரித்து வருகிறோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த தானியக்கி இயந்திரத்தில் வைக்கப்படும் உணவு பொருட்கள், சென்டர்லைஸ்ட் கிச்சன் எனப்படும் ஒருங்கிணைந்த சமையலறையில் தினமும் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை தயாரிக்கப்பட்டு வைக்கப்படுவதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். உணவு பொருட்களின் சுவை மற்றும் தன்மை காரணமாக மாணவர்கள் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.