சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் இணையதளத்தில் அடுத்த ஆண்டு புதியதாக ஆடியோ "லைவ் ஆடியோ" வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்த 'பேஸ்புக் லைவ்' என்னும் வீடியோ பதிவேற்ற வசதியைத் தொடர்ந்து தற்போது 'லைவ் ஆடியோ' என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா ராதாகிருஷ்ணன், "பயனர்கள் சில விஷயங்களை வீடியோவாக அல்லாமல், வெறும் வார்த்தைகளால் மட்டுமே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். இந்த லைவ் ஆடியோ அம்சம் அவர்களின் விருப்பத்தை எளிதாக்கும். தாங்கள் விரும்பிய வடிவத்தில் அதை ஒலிபரப்பலாம்.
நிகழ் நேர ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பில் மேலும் சில அம்சங்களை எங்கள் பார்ட்னர்கள் விரும்புகின்றனர் என்பதை அறிந்தோம். சென்ற வாரம் லைவ் 360 அறிமுகம் செய்யப்படது. இன்று மற்றொரு லைவ் அம்சத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சில சூழ்நிலைகளில், வலுவான நெட்வர்க் இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தும் லைவ் அம்சத்தை பயன்படுத்த நேருகிறது. அந்த நேரங்களில், பயனர்களுக்கு நாங்கள் சிக்னல் பலவீனமாக உள்ளது என எச்சரிக்கை செய்வோம். அதே நேரத்தில், லைவ் ஆடியோ அம்சம் குறைந்த சிக்னல் இருக்கும் பகுதிகள் செயல்படும் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வசதியானது சாதாரணமாக வானொலி அல்லது பாட்கேஸ்ட் முறைகளைப் போன்றே செயல்படும் என்று தெரிகிறது.