புதுடெல்லி: ஒரு பெண்ணைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் ரோபோ பொதுமக்களுக்கு சேவை வழங்கும் கிளார்க்காக பணியாற்றுகிறது. இந்த ரோபோ சைபீரியாவில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
நீண்ட இளஞ்சிவப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்ட இந்த ரோபோவைப் பார்த்தால் ஒரு ரஷ்ய பெண்ணாகவே தோன்றுகிறது. மாஸ்கோவிற்கு கிழக்கே 1,100 கிமீ (680 மைல்) தொலைவில் உள்ள Perm நகரில் இந்த ரோபோ பணியமர்த்தப்ப்ட்டுள்ளது.
இதுவரை, சட்டரீதியிலான சில நடைமுறைகளை நிறைவேற்றும்போது, குற்றவியல் பதிவு மற்றும் போதைப்பொருள் பழக்கம் இல்லை என்ற சான்றிதழ் தேவைப்படும் பணியை மனிதர்கள் செய்துவந்தனர். தற்போது ரோபோ இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் கோப்புகளை பரிசீலித்து, அரசிடம் இருக்கும் தகவல்களையும் பரிசீலித்து குற்றவியல் பதிவு, போதைப்பொருள் பழக்கம் இருக்கிறதா என்ற சான்றிதழ்களை வழங்கும் பணியில் இந்த Humanoid பணியாற்றுகிறது.
Also Read | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?
இந்த ரோபோ ஒரு சராசரி ரஷ்ய பெண்ணைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று Promobot என்ற projectஐ மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான ரஷ்ய பெண்களின் தோற்றத்தை பகுப்பாய்வு செய்து செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) உதவியுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அணியும் வெள்ளை சட்டை மற்றும் பழுப்பு நிற கோட் என்ற சீருடையை அணிந்திருக்கிறது இந்த ரோபோ. கண்கள், புருவங்கள் மற்றும் உதடுகள் மற்றும் செயற்கை தோலால் மூடப்பட்டிருக்கும் மற்ற இயந்திர தசைகள் ஆகியவற்றின் உதவியுடன் 600 க்கும் மேற்பட்ட மனித முகபாவனைகளை இந்த ரோபோவால் வெளிப்படுத்த முடியும் என்று இந்த ரோபோவை உருவாக்கிய நிறுவனம் கூறுகிறது.
இந்த ரோபோ பொதுவான கேள்விகளைக் கேட்கும், கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கும். ஸ்கேனர் மற்றும் அச்சுப்பொறியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கிளார்க் ரோபோ, ஆவண தரவுத்தளத்திற்கான அணுகலையும் கொண்டுள்ளது. இந்த ரோபோவின் உதவியால் மனித உதவியின்றே பணிகளை முழுமையாக செய்துவிட முடியும் என்று பதிவு அலுவலகத்தின் தலைவர் லியோனிட் க்ரோமோவ் கூறினார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லையா?