எகிப்தில் நடைபெற்ற COP 27
ஆப்பிரிக்காவுக்கான காலநிலை உச்சி மாநாடு என அழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 27-வது காலநிலை மாநாடு எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்திலேயே நடைபெற்ற இந்தக் கூட்டம், காலநிலை மாற்றத்துக்கு எதிரான நீதியை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகளில் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு அளிப்பது அளிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளே இந்த ஆண்டு மாநாட்டில் முக்கியத்துவம் வகித்தன. நவம்பர் 6-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, ஒருமித்த கருத்துகள் எட்டப்படாததால், இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு கடந்த 20-ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக, இந்த இழப்பீட்டை வழங்க அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இது வளரும் நாடுகளுக்கான வெற்றியாகக் கருதப்பட்டாலும், இந்த நிதியை யார் வழங்குவது, யார் நிர்ணயிப்பது, நிதிக்கான வரையறை என்ன உள்ளிட்ட கேள்விகள் கேள்விகளாகவே உள்ளன.
புதிய இலக்குகள் இல்லை
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் கட்டுப்படுத்துவதற்காக, 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்குவது குறித்து கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் பரவலாக விவாதிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்த போதிலும், புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பதென க்ளாஸ்கோ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை.
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசிற்குள் குறைக்க வேண்டுமென 7 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான புதிய இலக்குகள் ஏதேனும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மேலும் படிக்க | COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!
ஏமாற்றமடைந்த வளரும் நாடுகள்
வளரும் நாடுகள் 3 முடிவுகளை எதிர்பார்த்து எகிப்து காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்றன. முதலாவது, 2009-ம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி, வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களைத் தருவது, 2-வது, கார்பன் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவது, 3-வது, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு அளிப்பது. இதில், ஒரே ஒரு கோரிக்கைக்கு மட்டுமே முடிவு கிடைத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரின் எதிரொலி
உக்ரைன் - ரஷ்யா போரின் ஆதிக்கம் எகிப்து பருவநிலை மாநாட்டிலும் எதிரொலித்தது. எரிவாயு தேவைக்காக ரஷ்யாவை நம்பியுருந்த பல நாடுகள், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையால் தங்களது எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகின. அதே போல, அதிக எண்ணெய் உற்பத்தி கொண்ட நாடுகளே இந்த மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தின. எரிபொருளுக்காக அந்நாடுகளை சார்ந்துள்ள பிற நாடுகள் அவர்களை எதிர்க்க இயலாத சூழல் நிலவியது.
உக்ரைன் - ரஷ்யா போரினால் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைக்கத் தயங்கி வருகின்றன. அதே போல குறைவான உமிழ்வுகளைக் கொண்ட எரிபொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு, இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எண்ணெய் மற்றும் நிலக்கரியை விட இயற்கை எரிவாயு குறைந்த கார்பனை வெளியேற்றும் என்றாலும் அதிவும் புதைபடிவ எரிபொருள் தான் என்பதை மறுப்பதற்கில்லை. கார்பன் உமிழ்வை நிறுத்த வேண்டும் என்ற முடிவை எட்டிவிட்டு, இன்னும் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஊடகங்களில் குறைந்த முக்கியத்துவம்
அதே போல எகிப்து காலநிலை உச்சி மாநாடு நடைபெற்ற அதே நேரத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற வேறு சில நிகழ்வுகளால், ஊடகங்களில் அது குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத சூழல் ஏற்பட்டது.
27-வது காலநிலை உச்சி மாநாடு நவம்பர் 6-ம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடைபெற்ற நிலையில், முதல் வாரத்தில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. எனவே சர்வதேச ஊடகங்களின் கவனம் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளிலேயே இருந்தது.
அதே போல, 2-வது வாரத்தில், பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் அவர்கள் காலநிலை உச்சி மாநாட்டைத் தவிர்க்க நேர்ந்தது. 18-ம் தேதி நிறைவடைய இருந்த மாநாடு 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த அதே சமயம் கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற மாநாடு முழுவதும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற நிலையில் இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற மாநாடு அத்தகைய கவனத்தைப் பெறத் தவறி விட்டது.
எகிப்து மீதான விமர்சனம்
மேலும் எகிப்தில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்தே பல விமர்சனங்கள் எழுந்தன. மாநாட்டின் போது, உள்ளூர் மக்களின் நடமாட்டம் பல சாலைகளில் கட்டுப்படுத்தப்பட்டது. ராணுவ அடக்குமுறை கொண்டு உள்ளூர் மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தை எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும் என பல தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.
கடந்த முறை க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இங்கிலாந்து, காடுகள் அழிப்பு, மீத்தேன் உமிழ்வுக்கு எதிரான தீர்மானங்களுக்கு உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. க்ளாஸ்கோ மாநாட்டிற்குத் தலைமை வகித்த பிரிட்டன் எம்.பி. அலோக் சர்மா, உறுப்பு நாடுகளின் சம்மதத்தைப் பெறுவதற்காக கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்த ஆண்டு மாநாட்டை ஏற்று நடத்திய எகிப்து, அந்த அளவிற்கு இந்தக் கூட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றே கூறலாம். பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கடைசி 2 நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், மாநாட்டின் தலைவராக எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷோக்ரி, உறுப்பு நாடுகளை சம்மதிக்க வைப்பதற்குப் பதிலாக, தீர்மானத்திற்கு உட்படுவது அந்தந்த நாடுகளின் விருப்பம் என விலகிக் கொண்டார்.
கேள்விக்குறியான நம்பகத்தன்மை
பருவநிலை இழப்பீட்டு நிதியாக ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களை வழங்க வளர்ந்த நாடுகள் ஏற்கனவே உறுதியேற்ற நிலையில், இன்றளவும் அது நிறைவேற்றப்படவில்லை. ஆனால், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த கத்தார் நாடு 200 பில்லியல் டாலர்களை செலவழித்துள்ளது. இதனால் இவர்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு கடைசி நேரத்தில் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டாலும் எவ்வளவு நிதி வழங்கப்படும், யார் யார் நிதி வழங்குவார்கள், இந்த நிதியை நிர்வகிப்பது யார் என்பது பற்றி எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
எப்போது உணர்வோம்?
காலநிலை உச்சி மாநாடுகள் கண் துடைப்புக்காகவே நடத்தப்படுகின்றன என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்ட கால குற்றச்சாட்டு. இந்த மாநாடும் அதற்கு விதிவிலக்கின்றி முடிந்துள்ளது.இழப்பீடுகள் காலநிலை மாற்றத்திற்கு நிரந்தத் தீர்வு அல்ல என்பதை உலக நாடுகள் உணர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேதனைக் குரலாக உள்ளது. வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது வளரும் நாடுகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்றாலும், அவை நம்மை நிரந்தரத் தீர்வை நோக்கி இட்டுச் செல்லாது. இன்னும் இழப்பீடுகள் குறித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கும் நாம் காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது நோக்கி நகர்வோம் என்பது காலத்திற்கே வெளிச்சம். மாநாட்டின்போது மட்டும் கடைசி நேரத்தில் மட்டும் ஆலோசிக்காமல் ஆண்டு முழுவதும் இதற்கென பணியாற்றினால் மட்டுமே, அடுத்த மாநாட்டிலாவது தெளிவான முடிவை எட்ட முடியும். நிதிப் பகிர்வைக் காட்டிலும் காலநிலை மாற்றத்திற்கு உலகத் தலைவர்கள் எப்போது முக்கியத்துவம் தருவார்கள் என்பது கேள்விக்குறியே.
மேலும் படிக்க | COP 27-ல் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ