இளம் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஜப்பான் தவித்து வரும் நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்க ஐப்பான் அரசு முடிவுசெய்துள்ளது!
ஜப்பானில் பணி நிமித்தமாக சுமார் 3,00,000 வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டுமானம், விவசாயம் மற்றும் நர்சிங் துறையில் பெருமளவிலான வெளிநாட்டினர் வேலை செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த நடவடிக்கையின் பேரில் சுமார் 3 லட்சம் வெளிநாட்டினர் இத்துறைகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேலையில், இந்த மசோதாவால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படக்கூடும், அவர்களது வருமானம் குறையக்கூடும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி தரப்பு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தற்போது உலக அளவில் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் சராசரி ஆயுள்காலம் 85.5-ஆக உள்ளது. மேலும், இளம் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருப்பது அந்நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் இளம் தொழிலாளர்கள் பற்றாக்குறையினை வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதி முறை மூலம் சமாளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.