பிளிப்கார்ட் 90 நிமிடத்தில் பொருட்களை விநியோகம் செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது..!
மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வெறும் 90 நிமிடங்களில் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்த ஃபிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தங்களுக்கு தேவையானவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஆன்லைன் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக சமையலுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து வருகின்றனர். அமேசான் (Amazon) நிறுவனம் மின்னணு பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் ஆடர் செய்யும் பொருட்களை 90 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் பொருள் டெலிவரி செய்யப்படும். ஆனால் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்தால் 90 நிமிடங்களில் டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
ALSO READ | ரயிலின் கடைசி பெட்டியின் பின்பக்கத்தில் இருக்கும் 'X' குறியீட்டின் ரகசியம் தெரியுமா?
இந்த சேவைக்கு Flipkart Quick என பெயர் வைத்துள்ளனர். இந்த திட்டத்தின் முதல்கட்டமான சோதனை முயற்சியாக பெங்களூருவின் சில பகுதிகளில் அறிமுகமாகவுள்ளது. அமேசான் மற்றும் பிக்பாஸ்கெட்டுடன் போட்டியிடும் வகையில் ஃபிளிப்கார்ட் இந்த திட்டத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே மளிகைப் பொருட்களை குறைந்த நேரத்தில் டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் ஸ்விக்கி உள்ளிட்ட சில உணவு டெலிவரி நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் மாற்றம் செய்து வருகின்றனர்.