புது தில்லி: தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலையீட்டைக் கோரியுள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.
மோடிக்கு அவர் எழுதிய அவசரக் கடிதத்தில் சுவாமி, "தேர்வுகளை இப்போதே நடத்துவது, நாடு முழுவதும் இளைஞர்களின் ஏராளமான தற்கொலைகளுக்கு வழிவகுக்கும்." என்று கூறியுள்ளார்.
மும்பையை ஒரு உதாரணமாக அவர் காட்டினார். அங்கு பொது போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் 20-30 கி.மீ தூரத்தில் உள்ள பிற பகுதிகளிலிருந்து எவ்வாறு வருவார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். COVID-19 தொற்றுநோய் காரணமாக பல இடங்களில் பல தடைகள் அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர் வாதிட்டார்.
“இந்தத் தேர்வு மாணவர்களைப் பொருத்தவரை அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருப்பதால் மாணவர்கள் அதிகமான அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் முழுமையாகத் தயாராகும் போதுதான் அவர்களால் இந்த தேர்வை எழுத முடியும்" என்று மாநிலங்களவை எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
முன்னதாக சுவாமி கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியலுடன் (Ramesh Pokhriyal) பேசினார். இதை மோடியிடம் சுட்டிக்காட்டிய சுவாமி, தீபாவளிக்குப் பிறகு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற தனது ஆலோசனையை பொக்ரியால் கவனுத்துடன் கேட்டதாகவும் கூறினார். இருப்பினும், அதற்கு பிரதமரின் ஒப்புதல் தேவை என்று சுவாமி எழுதியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவைப் பற்றி சுவாமி ட்வீட் செய்தார். உச்ச நீதிமன்றம் தேர்வுக்கான தேதியை அரசாங்கம் முடிவு செய்யும் என்று கூறியிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக மாறியிருக்கும் சூழலால், இரண்டு நுழைவுத் தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை திங்களன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வைரஸ் பரவியுள்ள போதிலும் வாழ்க்கை தொடர வேண்டும் என்றும், செப்டம்பர் நடத்தவுள்ளதாக தேசிய சோதனை முகமை எடுத்துள்ள முடிவில் தலையிட்டு மாணவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
ALSO READ: அனிதா டூ சுபஶ்ரீ !! நீட் தேர்வு என்ற பெயரில் அரசே நடத்தும் கல்விக் கொலைகள்: மு.க.ஸ்டாலின்