உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.15, 16 முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக அறிவிப்பு..!
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். கடைசியாக தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த ஜுலை மாதம் அறிவித்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
விருப்பமனு கட்டண விவரங்கள்:-
> மாநகராட்சி மேயர் பதவி - ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவி - ரூ.5000
> நகர்மன்ற தலைவர் பதவி - ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி - ரூ.2,500
> பேரூராட்சி தலைவர் பதவி - ரூ.5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி - ரூ.1,500
> மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி - ரூ.5,000, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவி - ரூ.3,000