அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி வரும் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவுகிறது. பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு (Covishield) மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி கடந்த ஜூன் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக நாடு முழுவதும் இருக்கும் மூன்று கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணியில் நாடு முழுவதும் உள்ள 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் (SII) கோவிஷீல்டு தடுப்பூசியை அண்டை நாடுகளான நேபாளம், மியன்மார், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், ஆகிய நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர மொராக்கோ, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியாக தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொரோனா வைரஸ் (Corona Virus) தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) தனது ட்வீட்டில், பகவான் ஹனுமான் பகவான் 'சஞ்சிவினி மலையை' தூக்கிக் கொண்டு, இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கொண்டு வருவதை படத்தை போட்டு நன்றி தெரிவித்துள்ளார். ராமாயணத்தில் போரில் காயமடைந்த ராமரின் சகோதரரான லக்ஷ்மணரை குணப்படுத்த ஹனுமன் மூலிகையை கொண்டு வர சென்ற போது, அவர் அந்த மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அதை போல் உலகை இந்தியா காப்பாற்றுகிறது என்ற பொருள் விளங்க அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,"கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஆதரவை அளித்துவரும் இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிக்க நன்றி. அறிவைப் பகிர்வது உட்பட அனைத்து விஷயத்திலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனா பரவலைத் தடுத்து, உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும்" என்றார்.
Thank you #India and Prime Minister @narendramodi for your continued support to the global #COVID19 response. Only if we #ACTogether, including sharing of knowledge, can we stop this virus and save lives and livelihoods.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) January 23, 2021
உலகளவில் அதிக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ள நிலையில், கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
ஆக்ஸ்போர்ட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி, கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் (SII) உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு, தடுப்பூசியை தயார் செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR