அவதூறான தகவலை வெளியிட்ட வலைத்தளத்தின் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா முடிவு செய்துள்ளார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா. இவர் நடத்தி வரும் நிறுவனம் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஒரு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்த ஜெய், அந்த பத்திரிகை மீது ரூ.100 கோடி கேட்டு நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து விடுத்த அறிக்கையை பியுஷ் கோயல் டெல்லியில் வெளியிட்டார்.
தன் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தவே இது போன்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜெய் ஷா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் "தனது வியாபார நடவடிக்கைகள் அனைத்தும், நேர்மையாகவும், முறையாகவும் உள்ளது மட்டுமின்றி சரியாக வரிசெலுத்தியும் நடைபெற்வதாகவும், இதற்காக வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை அனைத்தும், வட்டியுடன் முறையாக செலுத்தி வரப்பட்டுள்ளதாகவும்" கூறியுள்ளார்.