Chandrababu Naidu Demands To BJP: மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 2014, 2019 ஆகிய கடந்த இரு ஆட்சியை போல் இன்றி இந்த முறை கூட்டணி ஆட்சிதான் மத்தியில் அமைய உள்ளது. குறிப்பாக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் அதிகளவில் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக 13 சிட்டிங் மத்திய அமைச்சர்கள் தோல்வியும் அடைந்திருப்பதால் அவர்கள் தங்களின் டிமாண்ட்களையும் அதிகப்படுத்தி வருகிறது.
பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 293 தொகுதிகள் இருக்கின்றன. அதில் 240 தொகுதிகள் பாஜகவின் கைவசம் உள்ளது. மீதம் உள்ளவற்றில் சந்திரபாபு நாயுடு 16 இடங்களையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கைப்பற்றி இருப்பதால் இவர்கள் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள் எனலாம். அதேபோல் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகியோரும் குறிப்பிடத்தக்க அளவில் முறையே 7 தொகுதிகளையும், 5 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். மற்ற கட்சிகள் அனைத்தும் ஓரிரண்டு இடங்கள்தான்.
சந்திரபாபு நாயுடுவின் டிமாண்ட்
நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் என்டிஏவின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதமும் அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் ஏகப்பட்ட கோரிக்கைகளை பாஜகவுக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் சந்திரபாபு நாயுடு ஆந்திரா மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது மட்டுமின்றி 16 மக்களவை தொகுதியை வைத்துள்ளார். முன்னர் கூறியது போல் என்டிஏ கூட்டணியில் அதிக இடங்களை பெற்ற இரண்டாவது அணி தெலுங்கு தேசம் கட்சிதான். எனவே, சந்திரபாபு நாயுடு அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக டிமாண்ட்களை அடுக்கி உள்ளார். ஐந்து மத்திய அமைச்சர் இலாகாக்களை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சாலை மற்றும் போக்குவரத்து துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றுடன் நிதித்துறையில் இணை அமைச்சர் பொறுப்பையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்களவை சபாநாயகர் பொறுப்பும் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாஜக கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய பொறுப்பை பெறும் நிதிஷ் குமார்
அதேபோல், நிதிஷ் குமார் என்டிஏவில் அதிக இடங்களை கைப்பற்றி மூன்றாவது கட்சியாகும். இந்த கட்சி 12 இடங்களை வைத்துள்ளது. எனவே, 2 இரண்டு மத்திய அமைச்சர் பொறுப்புகளையும், 1 இணை அமைச்சர் பொறுப்பையும் நிதிஷ் குமார் கோரியுள்ளார். அதிலும் ரயில்வே துறையை நிதிஷ் குமார் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1999ஆம் ஆண்டு மத்தியில் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியும் கூட்டணி உதவியுடன்தான் அமைக்கப்பட்டது. அந்த கூட்டணியிலும் சந்திரபாபு நாயுடு அங்கம் வகித்தார். அந்த ஆட்சியின் போது குறைந்தபட்ச பொதுவான செயல்திட்டம் (Common Minimum Programme) என்ற வரையறை உருவாக்கப்பட்டது. அதாவது, கூட்டணியில் உள்ள பொதுவான கொள்கைகளை மட்டும் வலியுறுத்தி ஒரு உடன்படிக்கையாக இந்த செயல்திட்டம் இருக்கும்.
இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கடுமையாக வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இந்த செயல்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மறைந்த ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் செயல்பட்ட நிலையில், தற்போது அந்த இடத்தை நிதிஷ் குமார் பிடிப்பார் என கூறப்படுகிறது.
மற்ற கட்சிகள்
சந்திரபாபு நாயுடு மட்டுமின்றி, ஹெச்.டி. குமாரசுவாமியின் மதச்சார்ப்பற்ற ஜனதா தளமும் இரண்டு மத்திய அமைச்சர் பொறுப்பை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அக்கட்சி விவசாயிகளுக்கான கட்சியாக பார்க்கப்படுவதால் விவசாயத்துறை குறிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 7 தொகுதிகளை கைவசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே, 5 தொகுதிகளை கைப்பற்றியுள்ள சிராக் பஸ்வான் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ