புது தில்லி: வடக்கு டெல்லி மாநகராட்சியின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், வடக்கு டெல்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கம் கடந்த வாரம் பிரதமருக்கு ஒரு மின்னஞ்சலில் கடிதத்தை அனுப்பியதாக தெரிவித்தனர். மேலும் டெல்லி மூன்று மாநகராட்சி பகுதிகளாகப் பிரிக்கப்படாதபோது, இந்த சங்கம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மருத்துவர்கள் மிகவும் மன அழுத்தத்தில் வேலை செய்கிறார்கள் என்று சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத் தலைவர் டாக்டர் ஆர்.ஆர். கவுதம், "கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மருத்துவர்களாகிய நாங்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை எங்களுக்குத் தெரியும்" என்றார். எங்கள் சம்பளத்தைத் தவிர வேறொன்றையும் நாங்கள் கேட்கவில்லை எனக் கூறினார்.
டெல்லியில் கொரோனா தொற்று 7,200 ஐ தாண்டியது:
மறுபுறம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் திங்களன்று இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,233 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இந்த பயங்கர தொற்றுநோயால் 73 பேர் இறந்துள்ளனர்.