தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா... தள்ளிப்போகும் தேர்தல் அறிவிப்பு? - பின்னணி என்ன?

Election Commissioner Resigns: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2024, 10:41 PM IST
  • அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றார்.
  • அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டில் நிறைவடைகிறது.
  • ராஜிவ் குமாருக்கு பின் தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலுக்கும் வாய்ப்பிருந்தது.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா... தள்ளிப்போகும் தேர்தல் அறிவிப்பு? - பின்னணி என்ன? title=

Election Commissioner Arun Goel Resigns: தேர்தல் என்றாலே பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து வரும் என்பது வாடிக்கைதான். எதிர்பாராத தேர்தல் கூட்டணிகள், தலைவர்களின் அதிரடி பேச்சுகள், அள்ளிவீசப்படும் வாக்குறுதிகள் என நொடிக்கு நொடி அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும். அதேபோல், வரும் மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செய்து வரும் நிலையில், தேர்தல் அட்டவணை மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றின் தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என நாடே எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இம்முறை அது அரசியல் கட்சிகளில் இருந்து வரவில்லை.

தள்ளிப்போகும் தேர்தல் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார். மேலும், தேர்தல் தேதி வரும் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இவரின் ராஜினாமாவால் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் கொடுத்த வாக்குமூலம்... பல உண்மைகள் வெளியாகும்: என்சிபி அதிகாரி பரபரப்பு ப்ரெஸ் மீட்

ராஜிவ் குமார் மட்டுமே உள்ளார்...

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே ஒரு காலியிடம் இருந்த நிலையில், தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருப்பதால் தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பது வழக்கமாகும். அதாவது, தேர்தல் ஆணையராக டி.என். சேஷன் இருந்த போது எழுப்பப்பட்ட பிரச்சனைகள் காரணமாக மூன்று ஆணையர்கள் நடைமுறை தேர்தல் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் பழைய நடைமுறையா...?

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது ஆணையர் பாண்டே ஓய்வு பெற்றார். அதன்பின், தற்போது வரை புதிய நியமனம் நடைபெறவில்லை, காலியிடமாகவே உள்ளது. அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்திருப்பது மூலம் மீண்டும் ஒரே தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பழைய நடைமுறைக்கு மாற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கூறுகின்றன. 

1985ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அலுவாரான அருண் கோயல், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி அன்று விருப்ப ஓய்வு பெற்றார். அவர் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே ஒரு நாள் அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 

நியமனத்திற்கு எதிரான வழக்கு

அவர் தேர்தல் ஆணையராக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், அருண் கோயல் நியமனத்தில் ஏன் இத்தனை அவசரம் என நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது,"தேர்தல் ஆணையருக்கு தேர்வானவர்களின் பட்டியலில் இருந்து நான்கு பெயர்களை சட்டத்துறை அமைச்சர் தேர்வு செய்கிறார். நவம்பர் 18ஆம் தேதி அன்று கோப்பு போடுகிறது, அதே நாளில் கோப்பு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. பிரதமர் கூட அதே நாளில் அவரின் (அருண் கோயல்) பெயரை பரிந்துரைக்கிறார். நாங்கள் இதில் எதிர்கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் இது ஏதாவது அவசரத்தில் செய்யப்பட்டதா? அப்படி என்ன அவசரம்," என்று கேள்வி எழுப்பியது.

கடந்தாண்டு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து அரசியலமைப்பு அமர்வும் விசாரணை நடத்தியது. இருப்பினும், அருண் கோயலின் நியமனத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது. 

அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ளது. அதுமட்டுமின்றி ராஜிவ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையாராக பதவியேற்கவும் அருண் கோயலுக்கு அதிக வாய்ப்பிருந்தது. ராஜிவ் குமார் அடுத்த வருடம் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வயநாடில் போட்டியிடும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியில் பதற்றம்: காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News