இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம் 5%, 12% ,18%, 28% என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி கூறியதாவது:-
இது தொடர்பான சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. . சரக்கு மற்றும் சேவை வரி பற்றி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அமல் படுத்தப்பட்டால் முதல் வருடத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படும். மக்கள் அதிக அளவில் பயன் படுத்தும் உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படமாட்டாது. பொது மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களுக்கு 5% மட்டுமே வரி விகிக்கப்படும். குடிநீர் பானங்கள், பான் மசாலா, ஆடம்பர கார்கள், ஆகியவற்றி ற்கு 28% வரி விதிக்கப்படும்.மேலும் 30 முதல் 31 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு 28% வரி விதிக்கப்படும். புகையிலை பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும். தங்கத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கூறினார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த 2 நாட்கள் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் மற்ற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.