சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதாக 1,400 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.....
அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இது தொடர்பாக 440 வழக்குகளை கேரள போலீஸார் பதிவுசெய்தனர். மேலும், நிலக்கல், பம்பா, சபரிமலை பகுதிகளில் போராட்டம் நடத்தியதாக 210 பேருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் போலீஸார் கடந்த 2 நாட்களாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், மாநிலம் முழுவதும் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுக்-அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டவர்களில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.