Lok Sabha Elections: இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. சின்னத்தை பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும் மக்கள் வாக்களிப்பது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அரசியல் புரிதல் அதிகமாகவே உள்ளது. சிறு ஆதாயங்களுக்காக ஆசைப்பட்டு ஐந்தாண்டுகள் அல்லல்பட மக்கள் தயாராக இல்லை. வேட்பாளரின் நோக்கம், அவர் செய்துள்ள சமூக பணிகள், மக்கள் சேவையில் அவரது அனுபவம், ஆர்வம், தகுதி என வாக்களிக்கும் முன் மக்கள் அனைத்தையும் மக்கள் அலசி ஆராய்கிறார்கள்.
கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ் ( Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. வியாழனன்று எண்டிஏ -வின் வயநாடு வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான கே.சுரேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். சுரேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடன் இருந்த அமைச்சர் பின்னர் ஒரு ரோட் ஷோவில் பங்கேற்று பொதுமக்களிடம் பேசினார்.
“நான்கு தசாப்தங்களாக அமேதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரு குடும்பம் அமேதிக்காக என்ன செய்துள்ளனர்? மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் அங்கு கலெக்டர் அலுவலகமே கட்டப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் அமேதி மக்களுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்ததுடன், நான்கு லட்சம் குழாய் இணைப்புகளையும் வழங்கியுள்ளது. நேரு குடும்பத்தினர் கூறுவது போல் அமேதி மக்கள் அவர்களது குடும்பம் போல் இருந்தால், ராகுல் காந்தி ஏன் அமேதியை விட்டு வெளியேறினார்? இப்போது அவர் வயநாட்டை தனது குடும்பம் என்று அழைக்கிறார். ஆனால் ராகுல் காந்தி அமேதி போல வயநாட்டை விட்டும் வெளியேறுவார்” என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் ஆனி ராஜாவும் மும்முரமான, தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்பி ராகுல் காந்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட வயநாடு என்ற பெயரையே நாடாளுமன்றத்தில் உச்சரிக்கவில்லை. இதனால் இத்தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்போது உங்களுக்கு வாக்களித்தால் அதன் பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் வருவீர்களா என என்னிடம் பெண்கள் கோவமாக கேட்கிறார்கள். சென்றமுறை அடுத்த பிரதமர் ராகுல்தான் என கூறி வாக்கு கேட்டுள்ளார்கள். அவர் பிரதமர் ஆகவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அவர் தனது தொகுதிக்கு வந்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளையாவது நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கலாம். வயநாட்டில் உள்ள மக்கள் சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், வயநாட்டின் தற்போதைய எம்பி -யான ராகுல் காந்திக்கு, சிபிஐ -இன் ஆனி ராஜா மற்றும் மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் ஆகியோரிடம் இருந்து கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை வயநாடு அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
மேலும் படிக்க | A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ