சபரிமலையில் 22 ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதியில் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது...!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்துஇம்மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக திறக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கோவிலுக்குள் செல்ல இரண்டு நாட்களாக பெண்கள் முயன்று வருகின்றார்கள். முதல் நாள் அன்று மாதவி என்ற பெண்ணும் நியூயார்க் டைம்ஸ்ஸை சேர்ந்த ஊடகவியலாளரும் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அப்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் கவிதா, மற்றும் கேரளத்தை சேந்த மாடல் மற்றும் சமூக சிந்தனையாளருமான ரெஹானா பாத்திமா மற்றும் ஸ்வீட்டி என்ற பெண்ணும் சபரிமலையில் ஸ்வாமி தரிசனத்திற்கு முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் தங்களின் முடிவில் உறுதியாக இருந்த காரணத்தால் அவர்களின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, மண்டல பூஜைக்காக வருகின்ற 22 ஆம் தேதி வரை ஐயப்பன் சன்னிதானம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். பதட்டமான சூழல் நிலவி வருகின்ற காரணத்தால் வருகின்ற 22 ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.