கிரேவால் 'காங்கிரஸ் தொண்டர்'; அவரது மரணம் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்துக்கு சம்பந்தம் இல்லை - வி.கே சிங்
மேலும் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய இணையமைச்சர் விகே சிங்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முன்னாள் ராணுவத்தினர் டெல்லி உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். நேற்று அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய இணையமைச்சர் விகே சிங்கிடம் செய்தியாளர்கள் தற்கொலை குறித்து கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதிய பிரச்னைதான் அவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.
வி.கே சிங்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:- இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு வி.கே.சிங் வெட்கப்பட வேண்டும். இறந்த வீரர் ஜனாதிபதியிடம் இருந்து 2 முறை பதக்கம் பெற்றவர், மேலும் ராணுவ தலைமை தளபதியிடம் ஒரு முறை பதக்கமும் பெற்று சிறந்த ராணுவ வீரராக திகழ்ந்தவர்'' என தெரிவித்துள்ளார்.