ரெப்போ 6.50%-ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25%-ஆகவும் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் அறிவித்துள்ளது!
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகளை வெளியிடும்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25% அளவிற்கு உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பின்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50%-ஆகவும்., ரிவர்ஸ் ரெப்போ 6.25%-ஆகவும் உயர்ந்தது.
அதன்பின்னர் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். ஆலோசனைக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.
அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50%-ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25%-ஆகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது இரண்டு முறை அடுத்தடுத்து வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதேபோல் 2019-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4-ஆக இருக்கும் பட்சத்தில் 2019-20-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5-ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டினை பொறுத்தமட்டில் இரண்டாம் அரையாண்டின் பணவீக்கம் 2.7% - 3.2% என்ற அளவில் இருக்கும் எனவும் கணித்துள்ளது!