மண்டல பூஜையையொட்டி கடந்த மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று நடைபெறும் மண்டல பூஜையின்போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள- தாளம் முழங்க சபரிமலை கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மதியம் வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மண்டல பூஜை முன்னிட்டு நேற்று டெல்லியில் ஜனக்புரியில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
இன்று நடைபெறும் மண்டல பூஜையையொட்டி டெல்லியில் பல இடங்களில் நேற்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.