தீவிரவாதத்தால் உலகின் பொருளாதாரத்திற்கு சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11-ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றிருந்தார். பிரேசிலியா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மோடி, உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த சூழல் இந்தியாவில் நிலவுவதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து, பிரேசிலியாவின் பழமையான இட்டாமராடி அரண்மனையில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மோடி குறிப்பிட்டார். பெரும்பாலான தீவிரவாத செயல்கள் மதவாத இயக்கங்களால்தான் நடைபெறுகின்றன என்று கூறிய மோடி மதம் அடிப்படையாக இருக்கும் வரை தீவிரவாதத்தை துடைத்தெறிய முடியாது என்று கூறினார். உலகிற்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள ஒரு டிரில்லியன் பொருளாதார இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். தீவிரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஒன்று புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக சில அறிக்கைகள் வெளியாகி இருப்பதை மோடி மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், ‘உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே உள்ளது. சமீபத்தில் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கினோம். உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, பிரேசிலியாவில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் தனது தாயகமான இந்தியா வந்தடைந்தார்.
The BRICS Summit in Brazil has been a very productive one. We had fruitful dialogues on cementing ties in trade, innovation, technology and culture.
The focus on futuristic subjects will surely lead to deeper cooperation that will benefit the people of our respective nations. pic.twitter.com/nyLXRCX7J3
— Narendra Modi (@narendramodi) November 14, 2019
இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். வர்த்தகம், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உறவுகளை உறுதிப்படுத்துவது குறித்து பலனளிக்கும் உரையாடல்கள் இருந்தன.
எதிர்கால பாடங்களில் கவனம் செலுத்துவது நிச்சயமாக ஆழ்ந்த ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும், அது அந்தந்த நாடுகளின் மக்களுக்கு பயனளிக்கும்" என அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.