மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்; பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... “2022 இல் புதிய இந்தியா” “2030-இன் பத்து தொலைநோக்கு திட்டங்கள்” என்று “கண்ணைக் கவரும்” அறிவிப்புகள் மூலம், அரசியல் சட்டத்தை துச்சமென மதித்து செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் இடைக்கால நிதியமைச்சரும் - இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குப் பதில் முழுமையான நிதி நிலை அறிக்கையைப் படித்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் “உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே” அமைந்துள்ளன. “இரு ஹெக்டேர் நிலத்திற்குக் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் நிதியுதவி”, “ஐந்து லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை” என்ற இரட்டை அறிவிப்புகள் வெளிப்படையாக வரவேற்புக்குரியவை போல் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நேரம் - அறிவிக்கப்பட்ட தொகை - அதை வழங்கும் நேரம் எல்லாம் விலகிச் சென்று விட்ட “விவசாய வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினரை” இதன் மூலமாவது கவர்ந்திழுத்து - அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு 2019 மக்களவைத் தேர்தலில் கரையேறி விட முடியுமா என்ற கனவுலகில் மத்திய பா.ஜ.க. அரசு பயணிப்பது புரிகிறது.
தமிழகம் உள்ளிட்ட - பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கே சென்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினார்கள். பிரதமரின் இல்லத்தையே முற்றுகையிட்டார்கள். அப்போதெல்லாம் “விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் வேலை அல்ல. மாநில அரசின் வேலை” என்று கூறி அடம்பிடித்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் காட்டுவதை எப்படி நம்புவது? குறிப்பாக “இந்த அறிவிப்பு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் மார்ச் 31 ஆம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்” என்பது ஏப்ரலில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான சலுகை அறிவிப்பு! இதே மாதிரி “ஐந்து லட்சம் வரை தனிநபர் வருமானம் உள்ளவர்கள் வருமான வரிக்கட்டத் தேவையில்லை” என்பதும் பா.ஜ.க. அரசின் முதல் வருடத்தில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டியது. இந்த குறைந்த பட்ச அறிவிப்பை வெளியிடவே பா.ஜ.க. அரசுக்கு நான்கு வருடங்கள் தாமதித்துள்ள நிலையில் “நாங்கள் தீர்மானமாகவும், நிலையாகவும், தூய்மையாகவும் அரசு நிர்வாகத்தை அளித்துள்ளோம்” என்று நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் “பதினைந்து லட்சம் வங்கிக் கணக்கில் போடும்” வாக்குறுதி தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. “ஊழலற்ற அரசு” என்ற அறிவிப்பின் கீழ் “லோக்பால் அமைத்து விட்டோம்” என்று குறிப்பு இல்லை. “பெட்ரேல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும்” எந்த முடிவும் இல்லை. அதற்குப் பதில் தமிழக விவசாயிகள் எதிர்க்கும் “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுப்போம்” என்ற அதிர்ச்சி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. உலகமே எதிர்கொள்ளும் “க்ளைமேட் சேஞ்ச்” தொடர்பான பிரச்னைகளுக்காக மாநிலங்களுக்கு ஏதாவது நிதியளிக்கப்படும் என்று தேடினால்- அதுவும் கண்ணில் படவில்லை. வருமான வரித்துறையை சீரமைக்கிறோம் என்ற பெயரில் இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறிக்கும் வகையில் வருமான வரித்துறையை முற்றிலும் தனியார் மயமாக்கும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த ஐந்தாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடாத மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர், “பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாத வகையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்” என்று கூறியிருப்பது இந்த நிதி நிலை அறிக்கையின் மிகப்பெரிய பொய்; அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, கெடுபிடி அறிவிப்புகள், விண்ணை முட்டும் விலை வாசி உயர்வு, கலால் வரியாக மட்டும் 16 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்து விட்டு பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருப்பது, 45 வருடங்களில் காணாத வேலை வாய்ப்பின்மை, “ரபேல் ஊழல்”- இப்படி கடந்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை- ஊழல்களை மூடி மறைக்கும் ஆட்சியை நடத்தி விட்டு திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் மக்களவை தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு “விவசாயிகளுக்கு சலுகை” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தில் “பழுது” மட்டுமல்ல- தேர்தல் ஆதாயமும் சேர்ந்தே இருக்கிறது. இறுதியாக இந்தியாவின் நிதிநிலைமை பற்றி ஒரு கற்பனைக் கோட்டை கட்டி- அதில் “எதிர்பார்க்கப்படும் வருவாயை அதிகப்படுத்திக் காட்டி, செலவுகளை செயற்கையாக குறைத்துக் காட்டி” பா.ஜ.க. அரசின் வழக்கமான கணக்கு தில்லுமுல்லுகள் மூலம் 4.5 சதவீதம் இருக்க வேண்டிய நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைத்து காட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரப் புள்ளி விபரங்களிலும் கைவைக்கும் பா.ஜ.க. அரசின் புரட்டு வேலை ஏற்கனவே அம்பலமாகி விட்டது. சுருக்கமாகச் சொன்னால் இது பட்ஜெட் அல்ல! பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை! மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்ததைப் போல இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த அறிக்கை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு “கொடுங்கனவாக”வே இருக்கப் போகிறது என்பதே உண்மை! என குறிப்பிட்டுள்ளார்.