தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டீர சமித்தி கட்சி மீண்டும் தனது பலத்தை மக்களவை தேர்தலிலும் நிரூபிக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன!
தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டீர சமித்தி மொத்தமுள்ள 17 இடங்களில், 14-ஐ கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆந்திரா, தெலுங்கான என இரு மாநிலங்கள் உருவான பின் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவின், தெலுங்கானா ராஷ்டீர சமித்தி அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயம், 2014-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலிலும், அந்த கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.
பாரதிய ஜனாதா கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ அல்லது சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சியோ அங்கு சோபிக்க வில்லை.
இதற்கிடையில் முன் கூட்டியே சட்டசபையை கலைத்துவிட்டு, சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர ராவ், மீண்டும் முதல்வராகியுள்ளார்.
இந்நிலையில், அந்த மாநிலத்தில், இம்முறை, மக்களவை தேர்தலில், அம்மாநில முதல்வரின் தெலங்கானா ராஷ்டீர சமித்தி கட்சி, 14 இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்பதால், அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, மக்களவை தேர்தலிலும், சந்திரசேகர ராவ் தன் பலத்தை மீண்டும் நிரூபிப்பார் என்றே நம்பப்படுகிறது.