புதுடெல்லி: கடந்த 8-ம் தேதி பிரதமர் மோட்டி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே என்றும் தெரிவித்தார்.
செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் கட்சிகளும், பொது மக்களும் மோடியின் திட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்க, உஷாரான மத்திய அரசு, பணம் மாற்றுவதிலும், ஏடிஎம் மூலம் எடுப்பதிலும் பல்வேறு விதிமுறைகளை விதித்தது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதை தடுக்க அடையாள மை வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் கடைசி நாள் வந்துவிட்டது. இன்று முதல் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் என எங்கும் செல்லாது. ஆனால், வங்கிகளில் வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை டெப்பாசிட் செய்யலாம்.
இந்த இடங்களில் செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவதற்கு இன்றே கடைசி நாள்:-
* அரசு மருத்துவமனை
* ரயில் மற்றும் மெட்ரோ டிக்கெட் பதிவு செய்ய
* விமான நிலையங்களில் விமான டிக்கெட் பதிவு செய்ய
* பெட்ரோல் பங்க்
* நுகர்வோர் கூட்டுறவு கடைகள்
* எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள்
* பவர் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கு
* பால் சாவடி