மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்!!
மாசி மக பௌர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும்.
மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும்.
மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம். கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று வழிபடுவதால் கணவனின் அன்பை பெற்று இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும்.
எனவே மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப் பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள்.