Maha Shivaratri 2025: ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி ஸ்வரூபனாய் இருக்கும் சிவபெருமானை கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான மகா சிவராத்திரி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருக்கும் சிவ பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தனிச்சிறப்பு பெற்ற நாள் சிவராத்திரி.
இந்த ஆண்டின் சிவராத்திரி இன்னும் சிறப்பு வாய்ந்தது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்ப மேளாவின் ஒரு பகுதியாக இந்த சிவராத்திரி கொண்டாட்டங்களும் அமைகின்றன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் செய்யப்பட்டு வருகின்றன. கோயில்களை சிறப்பாக அலங்கரிப்பதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி சிவன் அருளை நாடுகிறார்கள்.
மகா கும்ப மேளா நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் பலர் பிரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். ஆனால், சிலரால் சில காரணங்களால் அங்கு செல்ல முடியாமலும் போகலாம். அதற்கு வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நினைத்த மாத்திரத்தில் அருள் புரியும் சிவ பெருமான் இருந்த இடத்திலிருந்து மனமுருகி வேண்டினாலே அருள் புரிய தயாராக இருக்கும் கருணை தெய்வம் ஆவார்.
வீட்டிலிருந்தே மகா கும்பமேளாவில் ஸ்நானம் செய்த புண்ணியத்தை பெறுவது எப்படி?
மகா கும்பமேளாவிற்கு சென்று அங்கு ஸ்நானம் செய்வதன் முக்கியத்துவமும் அதனால் கிடைக்கும் புண்ணியமும் மிக அதிகம். இது முக்தியை அடைவதற்கான பாதையை அளிக்கிறது. ஆனால் கும்பமேளாவிற்கு அனைவரும் செல்வது சாத்தியமில்லை. அங்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலும் மகா கும்ப ஸ்நானத்தின் புண்ணியத்தை அடையலாம்.
வீட்டில் இருந்தபடியே மகா கும்ப ஸ்நானத்தின் புண்ணியத்தை அடைவது எப்படி? இதற்கு என்ன செய்ய வேண்டும்? சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
- மகா கும்ப ஸ்நானத்திற்கு சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம். ஆகையால், அதிகாலையில் எழுந்து சிவபெருமானை மனதில் நினைத்து, பிரம்ம முகூர்த்தத்தில் குளிப்பது சிறந்த புண்ணியத்தை அளிக்கிறது.
- வீட்டில் கங்காஜலம் எனப்படும் கங்கை நீர் இருந்தால், அதை தண்ணீரில் கலந்து குளிக்கலாம். கங்கை நீர் கிடைக்கவில்லை என்றால், பிற புனித நதிகளின் நீரையும் பயன்படுத்தலாம்.
- குளிக்கும்போது “ஹர் ஹர் கங்கே” அல்லது “ஓம் நம சிவாய” போன்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
- குளிக்கும்போது, சிவபெருமானை தியானித்து அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
- குளித்த பிறகு, ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. தானம் செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
- வீட்டில் குளிக்கும்போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, வணங்கி நமது நாட்டின் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து நமக்கு உதவும் அவற்றுக்கு நன்றி கூற வேண்டும்.
மகாசிவராத்திரி நாளில் இவற்றை செய்வதால் புண்ணியம் கிட்டும்
மகா சிவராத்திரி நாளில், சில சிறப்பு செயல்களை செய்வதன் மூலம் மகா கும்ப ஸ்நானம் செய்த புண்ணியத்தை பெறலாம்:
- சிவலிங்க அபிஷேகம்: மகாசிவராத்திரி நாளில் சிவலிங்க அபிஷேகம் செய்வது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
- விரதம் இருத்தல்: மகாசிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும் சிவனின் பரிபூரண அருளை அள்ளித்தரும்.
- இரவில் விழித்திருப்பது: மகாசிவராத்திரி நாளில் இரவில் விழித்திருப்பது சிவபெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெற உதவும்.
மகாசிவராத்திரியின் முக்கியத்துவம்
மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில்தான் சிவபெருமான் மற்றும் பார்வதி அன்னைக்கு திருமணம் நடந்ததாக ஐதீகம். மகா சிவராத்திரியன்று விரதம் இருந்து, கண் விழித்து, நான்கு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் நாம் சிவபெருமானை வேண்டினால், வேண்டியது அனைத்தையும் நமக்கு தந்தருள்வார் ஈசன்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025: இந்த ராசிகள் மீது சிவனின் விசேஷ அருள், உங்க ராசி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ