பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவதால் கிடைக்கும் மகிமை..!

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு..!

Last Updated : Nov 23, 2020, 11:01 AM IST
பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவதால் கிடைக்கும் மகிமை..! title=

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு..!

இன்றைய நாகரீக உலகு தனது புறம் சார்ந்த வாழ்வியல் வழிமுறைகளில் மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சிகள் விண்ணையே தொட்டு விட்டன. நமது சூரிய மண்டலத்தைத் தாண்டிய புறவெளி மண்டலத்தின் விரிவு பற்றிய ஆய்வுகளும் மிகமிக முன்னேற்றமடைந்துள்ளன. இருப்பினும், நம் தலைக்கும் மேலே விரிந்த புறவெளி பற்றி நாம் அறிந்த அளவை விடவும், நமக்குள் இருக்கும் நமது அகவெளி பற்றி நாம் அறிந்த அளவு மிகவும் குறைவுதான் என்பதை நாம் பல சூழ்நிலைகளில் உணர்ந்திருக்கிறோம்.

தன்னையறிய நினைக்கும் கலையே பெரும் கலை என்று எல்லாக் கால கட்ட மகான்களாலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நவீன மயமாக்கப்பட்ட வாழ்க்கையின் வேகத்திலும், சிக்கல்களிலும் சிக்கிய மனித சமூகத்தின் மிகப் பெரும்பாலானவர்களுக்கு தன்னையறியும் ஆன்மிகம் பற்றி நினைப்பதற்கே நேரம் இல்லை என்பதே நடைமுறை உண்மை. அக நிலையின் மைய இயக்கம் பற்றி உள்ளுணர்வு ரீதியாக ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதில் பலருக்குத் தடுமாற்றம் உள்ளதை உணர்ந்த நமது ஆன்மிகப் பெரியோர்கள், இயற்கையிலுள்ள பலவிதமான பொருட்களை ‘அருட் சாதனங்கள்’ என்று நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றின் மூலமாக செய்யும் பூஜை, பிரார்த்தனை, வழிபாடு, ஜபம், தியானம் ஆகிய முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தருகின்றன.

அப்படிப்பட்ட பலவித சாதனங்களில், இங்கு நாம் காண இருக்கும் சாதனம் ‘வலம்புரிச் சங்கு’. இது ஸ்ரீ லட்சுமி சங்கு என்றும் வழங்கப்படுகிறது.
இத்தகைய மகத்துவம் பெற்ற வலம்புரிச் சங்கின் வாயிலாக நமது நடைமுறை வாழ்வின் பல சிக்கல்களுக்கான தீர்வுகளைத்தரும் மந்திரமுறையிலான வழிபாட்டு முறைகளை இங்கு நாம் காணலாம்.

‘ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்’

இது சங்கிற்கான காயத்ரி மந்திரங்களில் ஒன்றாகும். இதைத் தினமும் ஸ்நானம் செய்த பிறகு 12 முறைகள் உச்சாடனம் செய்து தூப, தீப, நைவேத்தியம், ஆரத்தி என்ற முறைகளில் பூஜை செய்து வரலாம். சங்கை ஒரு மரப்பெட்டியில் மஞ்சள் பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு வெல்வெட் துணி விரித்து அதில்தான் வைக்க வேண்டும். இல்லாவிடில், அதற்கான செம்பு அல்லது வெள்ளி ஸ்டாண்டில் அதைத் தென்வடலாக வைக்க வேண்டும். தினமும் காலையில் அதைச் சுத்த தண்ணீரால் கழுவிப் பொட்டிட்டு, மலர்தூவி, கற்பூர ஆரத்தி காட்டி மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்து வரலாம்.

ALSO READ | உற்பாதங்களும், அபசகுனங்களும் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

மேலும் ஒரு நல்ல வலம்புரிச் சங்காக வாங்கி வந்து நமது கடைகள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வைத்து தினமும் தூபமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வந்தால் நல்ல பலன்கள் நாளும் நம்மை நாடித் தேடி ஓடிவரும். வலம்புரிச் சங்கை வெள்ளிப்பூண் போட்டு வைத்திருப்பதே மிகவும் நல்லதாகும்.

வலம்புரிச் சங்கை நாம் ஒரு வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளில் வாங்கி, அதைச் சுக்ர ஹோரை அமைந்த வேளையிலேயே நமது வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும். நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நாம் வைத்திருக்கும் வலம்புரிச் சங்கானது நமது உள்ளங்கையில் அடங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் அது நல்ல வெண்ணிறமாகவும் இருக்க வேண்டும்.

பித்தளை அல்லது வெள்ளி ஸ்டாண்டிலோ, அல்லது வெள்ளித் தட்டிலோ தென்வடலாக வலம்புரிச் சங்கு வைக்கப் படவேண்டும்.

முதன்முதலில் ஸ்ரீ லட்சுமி சங்கு எனப்படும் வலம்புரிச் சங்கை வீட்டிற்குக் கொண்டுவந்து அதைக் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி நமது வீட்டில் என்றும் இருந்து, நமக்கு நன்மைகள் தரப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

‘ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீதர கரஸ்தாய
பயோநிதி ஜாதய ஸ்ரீதக்ஷ்ணாவர்த்த சங்காய
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கராய பூஜ்யாய நமஹ’

நாம் வாங்கி வந்த சங்கை, ஒரு நதிநீரை விட்டு சுத்தமாகக் கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து, தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி மேற்கூறிய மந்திரத்தை 11 முறைகள் சொல்லி வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பெரிய பூஜா முறைகள் எதுவும் செய்யாவிடினும் கூட தினமும் ஒரு ஊதுபத்தியாவது காட்டி மேற்கண்ட ஸ்துதியை இயன்ற அளவு சொல்லி வணங்கி வரலாம்.

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்’

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும். நாமும் சிவப்பு நிற விரிப்பின் மீதே அமர வேண்டும். ஒரு மரப்பலகை மீது சிவப்பு நிற விரிப்பை விரித்து அதன் மீது ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்து அதன் மத்தியில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்தையும், வலம்புரிச் சங்கையும் வைக்க வேண்டும். குங்குமம், அட்சதை, ரோஜா இதழ்கள் ஆகியன கொண்டு அவற்றை அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு, பிறகு குரு வணக்கம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்ய தாமரை மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்.

புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு ஆகிய மூன்று நாட்களும் செய்து முடித்து விட்டு சனிக்கிழமை வரும் சுக்ர ஹோரையன்று ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றை நமது வியாபார ஸ்தலங்களிலோ, அலுவலகத்திலோ, தொழிற்கூடங்களிலோ, அல்லது நமது வீட்டின் பூஜையறையிலோ வைத்து தினமும் தூப தீபம் காட்டியும், மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சாடனமும் செய்து வந்தால் பணம் பல வித வழிகளில் நிச்சயம் வந்து சேரும்.

மேலும் பணம் வரும் வழிகள் யாவும் விரிவடையும். முக்கியமாக நாம் ஜபம் செய்யப் பயன்படுத்திய தாமரைமணி மாலையை ஏதாவது நீர் நிலைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். இந்தப் பூஜையால் நமது பொருளாதார நிலையின் எல்லைகள் விரிவு பெற்று, மனதில் உற்சாகம் ஊற்றெடுத்து, உழைப்பின் வழி வந்த உயர்வுகளால் வாழ்க்கையின்தரம் சிறப்படையும்.

எளிதாகக் கடைப்பிடிக்க உகந்த மேலும் சில வழிமுறைகளை இப்போது காணலாம்.

ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தன்றோ, புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியன்றோ, ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியன்றோ, அல்லது சித்திரை மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்றோ, அல்லது இவையனைத்து நாட்களிலுமோ, இரவில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு ஸ்ரீ மகாலட்சுமியின் மீது அமைந்த ஏதாவது ஒரு ஸ்துதியையோ, மந்திரத்தையோ சொல்லி அந்தத் திருமகளை எளிய முறையில் பூஜித்து வந்தால் கூடப் போதும், நம்முடைய குறைகள் யாவுமே மெல்ல மெல்ல விலகி வாழ்வில் வசந்தம் மலய மாருதமாய் வீசத் தொடங்கும்.

சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம். அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும் என்பது திண்ணம்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு விசேஷமான வழிமுறையை இப்போது நாம் காணலாம்.

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாம் கண்ட வழிபாட்டு முறைகளைப்போல், வலம்புரிச் சங்கை வைத்து நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாட்டு முறைகள் இன்னும் நிறைய நடைமுறையில் இருக்கின்றன.

வலம்புரி சங்கின் மகிமை

பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். ‘சங்கநாதம்’ பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும். அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதன்பொருட்டே பல முக்கிய நிகழ்வுகளில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது.

வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை. அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

Trending News