புது டெல்லி: சர்கார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தர்பார் படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தற்போது "தர்பார்" படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம், இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்திற்கு 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகையுடன் வட்டியும் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி உள்ளது. இந்த தொகையை வழங்கிய பிறகு தான் "தர்பார்" படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், வழக்கின் தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ப்ரமோஷன் பணிக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது