Hanuman Movie Review: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ள படம் ஹனுமன். பிரசாந்த் வர்மாவின் சினிம டிக் யுனிவர்சில் வெளியாகியிருக்கும் முதல் படம் இது. ஹனுமனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சூப்பர் ஹீரோ படமான ஹனுமன் படத்தில் தேஜா சஜ்ஜா, அமிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வெண்ணிலா கிஷோர், வினை, தீபக் ஷெட்டி, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஹனுமன் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் கூடியது, பொங்கல் விடுமுறையை ஒட்டி படம் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | BB 7 Title Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார்? கணிப்பு இதுதான்!
படத்தின் வில்லனான வினை சிறுவயதில் இருந்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்து அதே போல மாற முயற்சி செய்கிறார், இதை கண்டித்த தனது தாய் மற்றும் தந்தையையும் சிறு வயதிலேயே கொலை செய்து விடுகிறார். பின்பு அறிவியலின் உதவியுடன் இயந்திர சூட் மூலம் தன்னை சூப்பர் ஹீரோவாக மாற்றிக் கொள்கிறார், இருப்பினும் இயற்கையாகவே சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என்று ஒவ்வொரு ஆராய்ச்சிகளாக செய்கிறார் வினை. மறுபுறம் ஹீரோ தேஜா சஜ்ஜாவிற்கு திடீரென சூப்பர் பவர் கிடைக்கிறது. இந்த விஷயம் வில்லன் வினைக்கு தெரிய வருகிறது, பின்பு அவரது கிராமத்திற்கு சென்று அந்த சக்தியை அடைய நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது? அந்த சக்தி அவருக்கு கிடைத்ததா இல்லையா? என்பதே ஹனுமன் படத்தின் கதை.
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹனுமன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டி பூர்த்தி செய்துள்ளது. படம் முழுக்க உள்ள அட்டகாசமான விஎப்எக்ஸ் காட்சிகள் படத்தை தாங்கி நிற்கிறது. சிறிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய சூப்பர் ஹீரோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோவான தேஜா சஜ்ஜா அனுமந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கிராமத்தில் சிறிய திருட்டுகளை செய்து தனது அக்கா வரலட்சுமி உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஹனுமனின் சக்தி கிடைக்க, அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சுவாரசியமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.
கதாநாயகியாக நடித்துள்ள அமிர்தா ஐயருக்கு கதையில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதை அவர் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். வினை தனது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமாருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் வெண்ணிலா கிஷோர் மற்றும் ஸ்ரீனு அந்தந்த கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த கிராமம், ஊர் மக்கள், சிஜி, கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ள குரங்கு என அனைத்தும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர். படத்தின் ப்ரொடக்ஷன் வேல்யூ சிறப்பாக இருந்தது. இயக்குனர் சொல்ல நினைத்ததை ஒளிப்பதிவாளர் தசராதி சிவேந்திரா தனது கேமரா மூலம் காட்டியுள்ளார். கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் தமிழில் வொர்க் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது, சாய்பாபுவின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஹீரோவுக்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் வெறுமனே பில்டப் காட்சிகளாக இல்லாமல் சரியான எழுத்து மற்றும் திரைக்கதை உள்ளதால் அது நன்றாக வொர்க் ஆகியுள்ளது. ஹீரோவை ஹனுமனாக காட்டும் ஒவ்வொரு காட்சிகளுமே விசுவலாக சிறப்பாக உள்ளது. கடவுள் பக்தர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தெலுங்கு முன்னணி ஹீரோக்களை வைத்து வரும் ஒரு காமெடியும் நன்றாக இருந்தது. தெலுங்கு, மலையாளம், கன்னடா, தமிழ், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக ஹனுமன் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. என்னதான் சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் பட முழுக்க லாஜிக் மீறல்கள் நிறைய உள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் சில இடங்களில் நம்மை சோதிக்க வைக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் தாண்டி ஹனுமன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ