தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தலைவர் பொறுப்பில் இருந்த விக்ரமன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிக்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது.
முன்னதாக இயக்குநர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறாமல் நேரடியாக நியமிக்கப்பட்டதால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாரதிராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைப்பெற்ற தேர்தலில் ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இயக்குநர்கள் சங்கத் துணைத் தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஏற்கனவே சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால் ஆர்.வி.உதயகுமார் தேர்வானார். இதேப்போன்று பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயக்குநர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாலை 5 மணிக்கு எண்ணப்படு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இன்று நடைப்பெற்ற தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட 1503 வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.