பிக்பாஸில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல் குரல் கொடுக்க வேண்டும் என மதுமிதா வேண்டுகோள்!!
தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 77 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது". இருந்தாலும், அந்த நிகழ்வுகளை அவர்கள் ஒளிபரப்பவில்லை. அங்கு எண் அனடன்தது என்பதை தெரிந்து கொள்ள மக்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தனர்.
இதையடுத்து, தனியார் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாருக்கு மதுமிதா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், இன்று நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நடைபெற்ற அநீதிகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். மேலும், உடன் இருந்த மற்ற போட்டியாளர்கள் குழுவாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் நடிகை மதுமிதா குற்றம்சாட்டியுள்ளார். இதனால், நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள் என்றும், மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும் என்றும், 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து கமல் பேசாமல் வீட்டில் 24-மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும் என்றும் நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.